திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட சிந்துப்பூந்துறை-செல்விநகர், டவுண் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில், வீடு வீடாக நடைபெறும் குப்பை சேகரிப்புப் பணிகள் மற்றும் நுண்ணுயிர் உரமாக்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், , மாநகராட்சி ஆணையாளர் மரு.மோனிகா ராணா, ஆகியோர் இன்று (19.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில், வீடு வீடாக நடைபெறும் குப்பை சேகரிப்புப் பணிகள் மற்றும் நுண்ணுயிர் உரமாக்கும் மையங்களின் (Micro Composting Centres – MCC) செயல்பாடுகள் குறித்து இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, மாநகராட்சிப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் குப்பைகளை பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முறையாகத் தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் (Sanitary Waste), மருத்துவக் கழிவுகள் என தனித்தனியாகத் தரம் பிரித்து வழங்குவது மிகவும் அவசியமாகும். குப்பைகள் உருவாகும் இடத்திலேயே முறையாகத் தரம் பிரித்து வழங்கப்பட்டால் மட்டுமே அவற்றை உரிய முறையில் மறுசுழற்சி செய்து, பயனுள்ள பொருட்களாக செயலாக்க முடியும்.
மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 40 நுண் உயிர் உரமாக்கும் மையங்களில் (MCC) மக்கும் குப்பைகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், மாநகராட்சியில் பயோ கேஸ் / CNG Plant அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், விரைவில் “கழிவிலிருந்து ஆற்றல்” (Waste-to-Energy) தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 40 நுண் உயிர் உரமாக்கும் மையங்களும் மொத்தமாக சுமார் 80 மெட்ரிக் டன் குப்பைகளைச் செயலாக்கும் திறனுடன் முழுமையாக இயங்கி வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே, பொதுமக்கள் ஒவ்வொருவரும் தினமும் இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, தங்களது வீடுகளில் உருவாகும் குப்பைகளை உரிய வகையில் தரம் பிரித்து, வீடு தேடி வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் தனித்தனியாக வழங்க வேண்டும்.
“குப்பையை உருவாக்கும் இடத்திலேயே தரம் பிரிப்போம்; தூய்மையான மாநகராட்சியை உருவாக்குவோம்” என்ற நோக்குடன் பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். ஆய்வில், மாநகர நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன் , மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

