தமிழ்நாடு அரசானது பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SRM Institute of Science and Technology) எஸ்.ஆர்.எம் கல்லூரி பிசியோதெரபி (SRM College of Physiotherapy), இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் “நஷா முக்த் பாரத் அபியான்” (Nasha Mukt Bharat Abhiyaan) திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், “ROM 2026 – The Physio Run” என்ற 700 கி.மீ இடைவிடாத தொடர் ஓட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் வளாகத்தில் இன்று (12.10.2026) தொடங்கிய இத்தொடர் ஜோதி ஓட்டம் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பயணித்து, சென்னை காட்டாங்குளத்தூரில் வரும் வியாழக்கிழமை (15.10.2026) நிறைவடைகிறது.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், பேசியதாவது: இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் ஆகியவையே இத்தொடர் ஓட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இம்முயற்சி, இந்த ஆண்டு போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிசியோதெரபி மாணவர்கள், ஓட்ட வீரர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரின் பங்களிப்புடன் நடைபெறும் இத்தொடர் ஓட்டம் உடல் ஆரோக்கியம், மனவலிமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது."

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, கன்னியாகுமரி துணைக்காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், உதவி சுற்றுலா அலுவலர் வெள்ளசாமி, எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளி உடற்கல்வி முதல்வர் வீரகௌடமன், துணை முதல்வர் சுரேஷ், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.