தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் டேவிட் ராஜா (29) என்பவரின் மனைவி பிரின்சி கோல்டா. நிறைமாத கர்ப்பிணியான இவர், காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலையில் பிரின்சி கோல்டாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அவரை அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாகக் கூறி, மேல் சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை இறந்து பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே சரியாகச் சிகிச்சை அளிக்காததே குழந்தையின் உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறி, இறந்த குழந்தையுடன் காயல்பட்டினம் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஆறுமுகநேரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிப்பதாகக் கூறி உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.