முதியோர்களை பாரமரிப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் முதியோர் பாரமரிப்பது குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி ப்ரெய்லி கூட்டரங்கில் இன்று (07.09.2026) நடைபெற்றது.
இக்கருத்தரங்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் 34 முதியோர் இல்லங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச்சட்டம் 2007 பதிவு மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதில் 5 முதியோர் இல்லங்கள் அரசு மானியம் பெற்றுக்கொண்டு முதியோர்களை பராமரித்து வருகிறனர்.
அடல் வயோ அபியுதய யோஜனா (AVYAY) திட்டத்தின்கீழ் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் (MWPSC), மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள், இளம் தலைமுறையினருக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்துதல் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பெற்றோரைப் பராமரிப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். பெற்றோர்களைப் பராமரிப்பது சட்டத்தின் மூலம் மட்டுமே கட்டாயப்படுத்தப்படும் நிலை சமூகத்திற்கு ஒரு சிந்தனைக்குரிய விஷயம்யாகும். முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களைச் சிறப்பாகப் பராமரிக்க வேண்டியது சமூகத்தின் கூட்டுப் பொறுப்புயாகும்.
மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உறுதி செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் கீழ் முதன்மை அதிகாரிகளாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் செயல்படுவர். இவர்களின் தீர்ப்பில் உடன்பாடு இல்லாத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
பிரச்சனைகளுக்காக மட்டுமே சட்டத்தைப் பயன்படுத்தாமல், சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் குடும்பத்தினரை அழைத்துப் பேசி, கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்களில் முதியோர்களின் தேவைக்கேற்ப கழிப்பறை, சாய்வுப் பாதை அவர்களுக்கான மருத்துவ சேவைகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். முதியோர் இல்லங்களை பராமரித்து வரும் தன்னார்வலர்கள் அரசு அலுலவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
மேலும் முதியோர் குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுவாக கொடுக்கலாம். மூத்த குடிமக்கள் இலவச உதவி எண் 14567 ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் இச்சட்டத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல. பெற்றோரையும் பிள்ளைகளையும் சேர்த்து வைப்பதே. வசதியான சூழலில் இருக்கும் பிள்ளைகள் பெற்றோரைக் கைவிடும் நிலை சமூகத்தின் தோல்வியாகும்.
பிள்ளைகள் இல்லாத அல்லது ஆதரவற்ற முதியோர்களுக்கு மட்டுமே முதியோர் இல்லங்கள் புகலிடமாக இருக்க வேண்டும். வருங்காலத்தில் இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு சட்ட நுணுக்கங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கில் மாவட்ட சமூகநல அலுவலர் காயத்ரி, மாவட்ட சமூகநல அலுவலர் (ஓய்வு) சரோஜினி, வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

