தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்சேகர். இவரது மகள் பாக்கியலட்சுமி (21). பி.எஸ்சி பட்டம் பெற்றுள்ள இவர், படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பாக்கியலட்சுமி வீட்டில் உள்ள வேலைகள் எதையும் செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோர் கண்டித்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாக்கியலட்சுமி, நேற்று வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்துள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இரவிலேயே பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

