கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாகத் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுக்குத் திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கம் வாயிலாகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
திமுக எழுப்பிய முக்கியக் கேள்விகள்:
பெரியார் அறிவுலகத்தில் உள்ள 'அகல் விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரையிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன? இதற்கு யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் சென்றது?
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள 'வால்காவில் இருந்து கங்கை வரை' போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு தான் உள்ளன. கடந்த ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவது முற்றிலும் வெளிப்படையான முறையில் நடைபெற்றது என்பதைப் பதிப்பாளர்களே அறிவர்.
விலைவாசி உயர்வு, தொடரும் கொலைகள், காணாமல் போன சிறுமி விவகாரம், மின்வெட்டு மற்றும் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்த துயரச் சம்பவங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதை அடுத்து தவெக தலைவர் ஓடிவந்து அறிக்கை விட்டுள்ளார் எனத் திமுக சாடியுள்ளது.
மேலும், நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும் சில விசித்திரமான பெயர்களையும் பார்த்துப் பதறிய பிறகுதான் அரசுக்கு விவரம் தெரிந்ததா அல்லது எந்த விவரமும் தெரியாமல் டம்மி முதல்வர் அறிக்கை விடுகிறாரா என்றும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

