தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவா திருமண மஹாலில் இன்று (22.09.2026), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவிக்கையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்அடிப்படையில் 2026-2027ம் நிதியாண்டில் வட்டாரத்திற்கு 100 பயனாளிகளுக்கு ரூ.25000/- வீதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு ரூ.3,25,000/- சமுதாய வளைகாப்பு விழா நடத்திட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் பயன்பெறும் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்வு இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் கர்ப்பகாலத்தில் தாய் வீட்டு சீதனமாக சமூதாய வளைகாப்பு நிகழ்வில் சீர்வரிசை பொருட்களான தட்டு, தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல், பூ மற்றும் ஐந்து வகையான கலவை உணவுகள் வழங்கப்படுகிறது.
வளைகாப்பு விழாவின் நோக்கங்கள்
ஒரு குழந்தையின் வளர்ச்சி கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. குழந்தையின் வளர்ச்சி அதன் வாழ்வின் முதல் வருடத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது. 2 வயதை அடைவதற்கு முன் குழந்தையின் உடலில் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டை திரும்ப சரிசெய்வது என்பது முடியாததாகும்.கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
மேலும், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கிய நலனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், கர்ப்ப கால பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் (காலில் வீக்கம்) கண்டறிந்து தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், கர்ப்ப கால மன அழுத்தத்தை போக்குதல், கர்ப்ப கால மற்றும் சிசு மரண விகிதத்தைக் குறைத்தல், கர்ப்பிணிகள் நோய்வாய்ப்படுதலைக் குறைத்தல், கர்ப்பிணிப் பெண்களின் குடும்பத்தினருக்கு கர்ப்ப கால பராமரிப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் சூழ்நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தை கர்ப்பிணிகளுக்கு உணரச் செய்தல், சீம்பால் அளித்தல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தல், 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு அளித்தல்.
கர்ப்ப கால முன் பராமரிப்பு
கர்ப்பம் தரிப்பதற்கு ஒரு பெண் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். தாய் மன அழுத்தம், வருத்தம், வேதனை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்தால் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு புரோட்டின், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சத்து தேவைப்படுவதால் தினசரி உணவில் ஒரு கீரை, பருப்பு, பால், தயிர், காய்கறிகள், பழங்கள் ஆகியவை தவறாமல் இடம் பெற வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். இரத்த சோகையை தடுக்க கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து ஃபோலிக் அமில மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப கால கவனிப்புகள்
கர்ப்பம் என்று தெரிந்தவுடன் குழந்தைகள் நல மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் எடையினை சரிபார்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் சராசரி எடையை விட அதிகபட்சமாக 10 கிலோ எடை கூடுதல் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் குறைந்தபட்சம் 5 முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினசரி 3 வேளை உணவுடன் ஒரு வேளை கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.
கர்ப்ப கால பின் பராமரிப்பு
பாலூட்டும் தாய்மார்கள் நல்ல மனநிலையில், அமைதியான குடும்ப சூழ்நிலையில் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தை விட பாலூட்டும் காலத்தில் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். பாலூட்டும் தாய் 6 மாதங்களுக்கு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சிளம் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள்
6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு சக்தி நிறைந்ததாகவும், புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் போதுமான அளவு உள்ளதாகவும் இருக்க வேண்டும். எளிதில் தயாரிக்கக் கூடியதாகவும் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஐய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, ஐகோர்ட் ராஜா, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

