ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயாவுக்குத் தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த அபிநயா, தற்போது சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சாதனைக்குப் பின் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அவரது தந்தை ராஜராஜன், விமான நிலைய அதிகாரிகள், கிராம மக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனை அபிநயா கூறியதாவது: "எனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையும், 'எலைட் ஸ்கீம்' பயிற்சிக்காக ரூ.30 லட்சமும் வழங்கி ஊக்குவித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுன் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல தோல்விகளைச் சந்தித்த எனக்கு, தற்போதைய வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தகட்டமாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பதே எனது முதன்மை லட்சியம்.
இன்றளவும் பல இடங்களில் பெண் குழந்தைகளை விளையாட்டு மற்றும் உயர்கல்வியில் ஈடுபடுத்தாமல் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் பெண் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த முன்வர வேண்டும்.
நான் இதுவரை 13 நாடுகளுக்குப் பயணப்பட்டுள்ளேன். அந்த அளவுக்குத் துணிச்சலுடன் செயல்பட எனது குடும்பத்தினர் அளித்த ஊக்கமே காரணம். எனவே, அனைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகளின் திறமையைக் கண்டறிந்து சாதனையாளர்களாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் தனது சொந்த ஊரான ஆலங்குளத்திற்குச் சென்ற அவருக்கு, வியாபாரிகள் சங்கம், அரிமா சங்கம், மனவளக்கலை மன்றம் மற்றும் காமராஜர் வெண்கலச் சிலை பராமரிப்புக் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

