திருச்சி மாவட்டம் சமயபுரம் பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பாதிரியார் ஜெயராஜ் (56) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் ஜெயராஜின் அறைக்குச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, "இதை வெளியே சொன்னால் தொலைத்து விடுவேன்" என்று பாதிரியார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துச் சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை பள்ளியைத் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பொதுமக்கள் வருவதையறிந்த பாதிரியார் ஜெயராஜ் பள்ளியின் பின்வாசல் வழியாகத் தப்பியோடினார்.
கிராம மக்கள் நடத்திய விசாரணையில், பாதிரியார் ஜெயராஜ் இதேபோல மேலும் பல மாணவியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜெயராஜை நேற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

