தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு இந்திரா நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சண்முகையா மகன் வினோத் குமார் (29). இவர் சுங்கச்சாவடி ஆம்புலன்ஸில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடம்பூர் ஐசக் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகன் மாரீஸ்வரன் (27). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடம்பூரிலிருந்து கயத்தாறு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
கயத்தாறு - கடம்பூர் சாலையில் எதிரெதிரே வந்த இருவரின் மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. இவ் விபத்தில் இருவருமே தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் வினோத் குமாருக்குக் காலில் முறிவு ஏற்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மாரீஸ்வரன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த மாரீஸ்வரனுக்குத் திருமணத்திற்காக அவரது தாயார் நேற்று தான் வெளியூருக்குச் சென்று பெண் பார்த்து முடித்துவிட்டு வந்துள்ளார். பெண் பார்த்து முடித்துவிட்டுக் கடம்பூர் ரயில் நிலையத்தில் இரயிலில் வந்து இறங்கிய தாய்க்கு, மகன் விபத்தில் இறந்துவிட்டான் என்ற துக்க செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ் விபத்து குறித்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சூரியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

