தூத்துக்குடி மாவட்டம், சொக்கன் குடியிருப்பு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அருளானந்தம் மகன் ஜேசு மரியான் (65). இவருக்கு மனைவியும் 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 5 வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சின்ன ராணியபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் வீட்டில் தங்கியிருந்து நடுவக்குறிச்சியில் உள்ள தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மழை பெய்ததால் தோட்டத்தில் உள்ள மாடு நனையாமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து தார்ப்பாய் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தட்டாரமங்கலம் பழைய ஒயின் ஷாப் எதிரே வந்த போது பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.