தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் வேல்முருகன் (56). இவர் நேற்று தனது பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் இளையரசனேந்தல் சாலை, டைமண்ட் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து எதிர்பாராதவிதமாக வேல்முருகனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், வேல்முருகனின் உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுநரான சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சீதாபதி (52) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.