கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் குழித்துறை நகராட்சி, வாவுபலி பொருட்காட்சி திடல் வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றில் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில் -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை மூலம் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (11.09.2026) மற்றும் மறுநாள் (12.09.2026) ஆகிய இரு தினங்களிலும் மாவட்டத்திலுள்ள 12 இடங்களில் இது போன்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் போதுமான அளவு மணல் மூட்டைகள். மரம் அறுக்கும் இயந்திரங்கள், அதிக குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார்கள், ஜேசிபி, பொக்லைன் மற்றும் மீட்பு படகுகள் போன்றவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்கனவே 1077 மற்றும் 231077 போன்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூர் ஆகிய வட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் 5,400 நபர்கள் தங்கும் வகையில் 12 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளது. இதை தவிர மாவட்டம் முழுவதும் 59 தற்காலிக பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளது.
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில் 2,750 முதல்நிலை மீட்பாளர்கள் (First Responders), 300 ஆப்த மித்ரா தன்னார்வலர்கள், 600 யுவ ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளார்கள். மேலும் தீயணைப்புத்துறை, காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப்படையினர் (TNDRF), வருவாய்த்துறை, மின்சாரவாரியம், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறைகள் போன்ற தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நீர் கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பரிசில் சென்று மீட்பது, தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் பொதுமக்கள் எஞ்சின் பொருத்தப்பட்ட மிதவை படங்களில் விரைந்து சென்று மீட்பது, ஆற்றின் மறுகரையில் சிக்கி தவிக்கும் பொது மக்களை கயிறு மூலம் மீட்பது, பொதுமக்களுக்கு உடனடியாக முதலுதவி செய்து, மேற்கொண்டு சிகிச்சை தேவைபடுவோரை மேல்சிகிச்சைக்கு அனுப்புவது, கட்டிடத்தின் முதல் மாடியில் சிக்கி உள்ளவர்களை மீட்பது, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது குறித்து பார்வையிட்டதோடு அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்கள் பேரிடர் காலங்களில் பதட்டம் அடையாமல் மீட்பு பணியில் ஈடுபடும் தீயணைப்பு உள்ளிட்ட வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் சத்யகுமார், உதவி அலுவலர் துரை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலதி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, குழித்துறை நகராட்சி ஆணையர் சக்திவேல், கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் (பொ) சந்திரகுமார் விளங்கோடு வட்டாட்சியர் ஜான் ஹனி, அன்னம்மாள் நர்சிங் கல்லூரி செவிலியர்கள், Nvks உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

