பாக்கெட் உணவுகளில் உள்ள அதிகளவிலான உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு குறித்துப் நுகர்வோரை எச்சரிக்கும் வகையில், பாக்கெட்டின் முன்பக்கத்திலேயே எச்சரிக்கை லேபிள்களை அச்சிட்டு ஒட்டுவது தொடர்பாக ஒருங்கிணைந்த முடிவு எடுக்க வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், பாக்கெட் நொறுக்குத் தீனிகளில் உள்ள உணவுப் பொருட்களின் அளவைக் தெளிவாகக் குறிப்பிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
முந்தைய விசாரணையின் போது, இத்தகைய எச்சரிக்கை லேபிள் முறையை அறிமுகப்படுத்துவதில் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தாமதம் செய்வதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்: "நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில், குறிப்பாகக் குழந்தைகளின் உடல் நலனில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். எனவே, பாக்கெட் உணவுகளின் முன்பக்க முகப்பில் எச்சரிக்கை லேபிள் ஒட்டுவது தொடர்பாக தேசிய நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்த முடிவை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாக இருந்தால் அதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதா என எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், "அதிக அளவில் பதப்படுத்தப்படும் 'அல்ட்ரா பிராசஸ்டு' உணவுகளுக்குக் கடுமையான எச்சரிக்கைக் குறியீடுகளையும், பிரத்யேக நிறத்திலான எச்சரிக்கை அடையாளங்களையும் வழங்க வேண்டும்" என யோசனை தெரிவித்தார்.
இக்கோரிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது குறித்த விரிவான உத்தரவு ஓரிரு தினங்களில் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், அனைத்துத் தரப்பினரும் அதனைப் படித்துத் தயாராக வேண்டும் என்றும் கூறி விசாரணையை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

