வெள்ளப் பேராபத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் தருவைகுளம் ஓடையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முகத்துவார மணல் மேடுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் சமத்துவபுரம் ஓடையில் மழைக்காலங்களில் தருவைகுளம் கண்மாயிலிருந்தும் காட்டாற்றிலிருந்தும் பெருக்கெடுத்து ஓடும் நீரானது, சமத்துவபுரம் அருகே உள்ள ஓடையின் வழியே கடலில் சென்று கலப்பது வழக்கம்.

ஆனால் தற்போது, அந்த ஓடை முழுவதும் சீமைக்கருவேல முள்கள் பெரிய மரங்களாக வளர்ந்து தண்ணீர் தடையின்றி செல்ல முடியாதபடி அடைத்துள்ளது. மேலும், மீன் கம்பெனிகளின் கழிவுநீரும் அங்குத் தேங்கியுள்ளது. அதையும் மீறிச் சிறிதளவு நீர் சென்றாலும், கடலில் கலக்க முடியாதபடி கடற்கரையின் முகத்துவாரப் பகுதியில் மணல் மேடுகளால் பாதை அடைபட்டுள்ளது.

இவ்வாறு மணல் மேடுகளாலும் சீமைக்கருவேல மரங்களாலும் நீரின் ஓட்டம் தடைபடும் போது, அந்த வெள்ளநீரானது வேறு வழியின்றி தருவைகுளம் ஊருக்குள் புகுந்து கூண்டன்பச்சேரி வழியாக மேலத்தெரு, தெற்குத்தெரு பாதைகளில் ஓடி ஊர் முழுவதையும் வெள்ளக் காடாக்கும் ஆபத்து உள்ளது.

எனவே, இந்த நிலையை உணர்ந்து பேரழிவிலிருந்து மக்களைக் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடையில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் முகத்துவார மணல் மேடுகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்" என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.