கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் இருந்து குளச்சல் வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மூதாட்டி ஒருவர் நின்றபடி பயணம் செய்துள்ளார். அவர் தனது கையில் வைத்திருந்த பையில் கைபேசி மற்றும் சிறிய பணப்பையை வைத்திருந்தார்.

பேருந்து குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கைக் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் நைஸாக மூதாட்டியின் பையிலிருந்த பணப்பையைத் திருடியுள்ளார். இதனை அருகே நின்ற மற்றொரு பெண் பயணி பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனே ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார்.

நிலைமையை உணர்ந்த அந்தப் பெண், தன்னுடன் வந்த மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து பேருந்திலிருந்து அவசர அவசரமாக இறங்கித் தப்பியோட முயன்றார். உடனே சக பெண் பயணிகள் இருவரையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணப்பை நழுவி கீழே விழுந்தது.

ஆத்திரமடைந்த பயணிகள் அப்பெண்ணிற்குத் தர்மஅடி கொடுத்தனர். மீண்டும் அவர்கள் தப்பியோட முயன்றபோதிலும், பயணிகள் இருவரையும் தப்பிக்க விடாமல் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளச்சல் காவல்துறையினர், இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி சாரதா (38) மற்றும் ராசா மனைவி சிவரஞ்சனி (19) என்பதும், தாய்-மகளான இருவரும் பேருந்துகளில் இதுபோன்று தொடர்ந்து கைவரிசை காட்டி வந்ததும் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த குளச்சல் காவல்துறையினர் சாரதா மற்றும் சிவரஞ்சனி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருடிய தாய், மகளைப் பயணிகள் மடக்கிப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.