தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, மணக்கோலத்தில் காட்சியளித்த காந்திமதி அம்மனுக்குச் சிவ ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள மணமேடையில் திரு மணக்கோலத்தில் அம்மன் எழுந்தருளினார்.

அதன்பின்னர், சுவாமி சன்னதியிலிருந்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு அலங்காரத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய நெல்லையப்பர் மேளதாளங்கள் முழங்க ஆயிரங்கால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு நெல்லை கோவிந்த சாமிக்கு பாதாபிஷேகம் செய்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

அப்போது மணமேடைக்கு எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனுக்கு மாலை மாற்றுதல் மற்றும் உச்சகால பூஜைகள் நடைபெற்றன. யாக சாலை பூஜைகளைத் தொடர்ந்து காந்திமதி அம்மனுக்குத் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டுத் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

பின்னர் சோடஷ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருமாங்கல்ய சரடு, மஞ்சள் மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குத் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு சுவாமி-அம்பாளைத் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.