நெல்லை டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதான பிளம்பிங் தொழிலாளி ஒருவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு அவரது தந்தையே தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்துத் தாயார் உள்ளிட்ட வீட்டில் உள்ளவர்களிடம் கூறினால் கொன்று விடுவதாக மாணவியை அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளார். இதனிடையே, மாணவி படிக்கும் பள்ளிக்கு சமீபத்தில் தமிழக அரசின் 'சிங்கப்பெண்' அதிரடிப் படையினர் நேரில் சென்று, பாலியல் விழிப்புணர்வு குறித்துப் பேசியதுடன், அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி நேற்று தைரியமாகச் சிங்கப்பெண் அதிரடிப் படையினருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, தன் தந்தை தனக்குச் செய்து வந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலையில் குன்னத்தூருக்கு விரைந்து வந்த சிங்கப்பெண் படையினர், மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையைப் பிடித்து நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.