கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் அனந்தநாடார்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா (28). பிரபல பெண் யூடியூபரான இவர் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இவரது வீட்டில் கடந்த மாதம் சுமார் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து என்பவர் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மதுமிதா என்னிடம் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை நைசாக பறித்து சென்றதாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து போலீசார் அதனை ஜீரோ எப்.ஐ.ஆர். முறையில் பதிவு செய்து, அந்த வழக்கை நேற்று முன்தினம் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றினர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா.சாஸ்திரி கூறுகையில், "யூடியூபர் மதுமிதா மீதான நகை பறிப்பு வழக்கு தற்போதுதான் பாளையங்கோட்டை காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் 2022-ம் ஆண்டு நடைபெற்று உள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கண்டிப்பாக கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.இந்த வழக்கில் புகார்தாரரான பேச்சிமுத்துவிடம் போலீசார் இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

