தூத்துக்குடி நகரப் பணிமனையில் அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துனராகப் பணியாற்றி வரும் ஆறுமுகம் என்பவரைக் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அசிங்கமாகப் பேசி, மிரட்டித் தற்கொலைக்குத் தூண்டியதாககவும், விடுப்புகள் வழங்கக் கூடுதல் நேரம் வேலை பார்க்கச் சொல்லி மிரட்டுவதாகவும், தொழிலாளர்களைக் கூடுதல் பணி பார்க்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைக் கண்டித்தும், கிளை மேலாளர் மீது துறைரீதியான வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நகரப் பணிமனை முன்பு சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

