தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளை முன்னேற்றும் விதமாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதியில் முதல்வரின் படிப்பகம் ரூ.310.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரைத்தளம் புத்தகங்களுடன் கூடிய படிப்பகமாகவும், முதல் தளம் உணவருந்தும் இடமாகவும் மற்றும் வாகனம் நிறுத்தும் இடமாகவும் கட்டப்பட்டு வருகிறது. இந்நூலக கட்டட கட்டுமான பணிகளையும்

மாநகராட்சி பகுதியில் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்காக ரூ.69.87 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தையும் வடசேரி பேருந்து நிலைய பகுதியில் ரூ.895.00 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 100 புதிய அங்காடிகள் கட்டுமான பணியினையும் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள செம்மாங்குளத்தை ரூ.659.00 இலட்சம் மதிப்பில் தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை அமைக்கும் பணியினையும் ஒழுகினசேரி பகுதியில் ரூ.95.00 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் ஓடையையும்

புளியடி பகுதியில் அமைந்துள்ள மயானத்தை உயிரி எரிவாயு தகன மேடையாக மாற்றுவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அது தொடர்பான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார். ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, மாநகர பொறியாளர் ஜெகஜீவ ராமன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.