தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மறுத்ததைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையின் இறுாிநாள் கூட்டத்தொடரில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், சர்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் மிசா விவகாரங்கள் குறித்துப் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பில் எ.வ.வேலு கோரிக்கை வைத்தார்.
அப்போது பேசிய எ.வ.வேலு, அவையில் இல்லாதவர்கள் குறித்தும், நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரங்கள் குறித்தும் பேசுவது அவை மரபுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டார். மேலும், சர்காரியா கமிஷனில் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதையும், மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் சிறையிலிருந்த வரலாற்றுப் பின்னணியையும் சுட்டிக்காட்டி, முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜே.சி.டி. பிரபாகர், மிசா மற்றும் சர்காரியா கமிஷன் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே அவையில் விவாதிக்கப்பட்ட உண்மையான செய்திகளே என்பதால், முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுப் பதாகைகளைக் காட்டி கோஷங்களை எழுப்பினர். அவை முன்னவர் செங்கோட்டையன் அமளியில் ஈடுபடுவோரை வெளியேற்ற வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவையின் அமைதியைக் கருத்தில் கொண்டு திமுக உறுப்பின அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

