தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்க விழா, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சர்வதேசத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்கிறார். இந்த முதலீட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் செப்டம்பர் 16-ஆம் தேதிதான் தமிழகம் திரும்புகிறார்.
இதன் காரணமாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். இத்தொடக்க விழாவில், உசிலம்பட்டி பகுதியில் பிறந்த 1,500 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

