பெட்ரோல், டீசல் இறக்குமதி செலவைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த 'E20' பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 100% தூய எத்தனால் எரிபொருளில் (E100) இயங்கும் வாகனங்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, E100 தூய எத்தனால் எரிபொருளில் இயங்கக்கூடிய 'ஃப்ளெக்ஸ் ஃபியூயல்' (Flex-Fuel) வாகனங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாகனங்களைக் கார் நிறுவனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: "E20-க்கு மேல் மற்றும் E100 வரையிலான எரிபொருட்களை, அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுச் சான்றளிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற சாதாரண வாகனங்களுக்கு இது பொருந்தாது. E20 அல்லது சாதாரண எரிபொருளில் இயங்கும் வழக்கமான வாகனங்களில் E85 அல்லது E100 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது" எனத் தெளிவுபடுத்தினார்.