குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மற்றும் கட்டையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன் சந்தைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு தலைமையில் சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் தங்கேஸ்வரன், கடல் முதல்வர் ஆயிஷா மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், வினிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் இன்று நாகர்கோவில் பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வடசேரி மீன் சந்தையில் 32 கிலோவும், கட்டையன்விளை மீன் சந்தையில் 15 கிலோவும் என மொத்தம் 47 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.உடனடியாக அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து இரசாயனம் ஊற்றி அழித்தனர்.

பொதுமக்களின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது எனச் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். மேலும், இதுபோன்று தரமற்ற மற்றும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வது மீண்டும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.