அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் முடிவடைந்துள்ள சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஈரானை அணு ஆயுதம் தயாரிப்பதில் இருந்து தடுத்திருக்காவிட்டால் இஸ்ரேலும் மத்திய கிழக்கு பிராந்தியமும் இருந்திருக்காது என்றும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். மேலும், தேவையேற்பட்டால் அந்த நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் எனவும் டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் தொடர்ச்சியான மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது தங்களது படைகள் பன்மடங்கு வலிமையாகவும், சிறந்த அனுபவத்துடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால், பிராந்தியத்திற்கு வெளியே உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்தும், எந்தவித எல்லைகளுமின்றி உடனடியாகவும் திறன்மிக்கதாகவும் பதிலடி கொடுக்கப்படும்.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உத்தரவுப்படி தாங்கள் செயல்படுவதாகவும், தாங்கள் விதித்துள்ள 7 நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் விடுத்துவரும் கடும் எச்சரிக்கைகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மூளுமோ என்ற பதற்றமும் அச்சமும் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.