தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் தலைமையில் ஏரல் காவல் சரகத்திற்கு உட்பட்ட வாழவல்லான் பகுதியில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வாழவல்லான் பகுதியில் நடைபெற்ற சோதனையில் 698 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாகச் செபத்தையாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி, சிவகளையைச் சேர்ந்த வத்ராயிப் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில், சந்தேகத்திற்கு இடமான இடத்தில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களைப் போலீசார் கைப்பற்றினர்.
ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் சேர்த்து சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 768 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மொத்தமாக எங்கிருந்து வாங்கி வரப்பட்டன, பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

