திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக தலா ரூ.14,400/- 2 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.6.97 இலட்சம் மதிப்பில் இறப்பு நிவாரண உதவித்தொகையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.வித்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரோஷன்பேகம், மாவட்ட வழங்கல் அலுவலர் சிந்து உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

