மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 17, 2026 அன்று மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மீகப் பெருவிழாவில் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு இரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு இரயில்களை அறிவித்துள்ளது. ஆனால், தெற்கு இரயில்வேயின் மிக முக்கியமான கோட்டங்களில் ஒன்றான திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் எல்லைப்புற மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து மதுரைக்கு ஒரு சிறப்பு இரயில் கூட இயக்கப்படாதது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு இரயில்வே பொது மேலாளர் மற்றும் திருவனந்தபுரம் கோட்ட மேலாளருக்கு அவசரக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
• பாகுபாடற்ற சேவை தேவை: இந்திய இரயில்வே "ஒரே இரயில்வே, ஒரே தேசம்" என்ற கொள்கையில் செயல்படுகிறது. எனவே, சிறப்பு இரயில் சேவைகளை வழங்குவதில் மண்டல, மாவட்ட அல்லது மாநில எல்லைப் பாகுபாடு காட்டக்கூடாது.
• பக்தர்களின் சிரமம்: கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை கும்பாபிஷேகத்திற்குச் செல்லத் தயாராக உள்ளனர். வழக்கமான இரயில்களில் ஏற்கெனவே பயணச்சீட்டுகள் முடிவடைந்துவிட்டதால் (Waitlist), சிறப்பு இரயில்கள் இல்லாதது பக்தர்களைக் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
• உடனடி சிறப்பு இரயில்கள் இயக்கம்:
1. கன்னியாகுமரி – மதுரை (நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக)
2. திருவனந்தபுரம் சென்ட்ரல் – மதுரை (நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி வழியாக)
3. கொல்லம் – மதுரை (புனலூர், செங்கோட்டை, தென்காசி வழியாக) ஆகிய வழித்தடங்களில் உடனடியாகக் சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும்.
தெற்கு இரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கன்னியாகுமரி & தென் மாவட்ட மற்றும் தெற்கு கேரள பக்தர்களின் நலன் கருதி சிறப்பு இரயில்களை விரைந்து அறிவிக்க வேண்டும் என இரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

