தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர், தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு, அவர்கள் தவெகவில் இணைந்தனர்.

அதேபோல, இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளைத் தவிர, எஞ்சிய தொகுதிகள் குறித்து தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் எஸ் சுகன்யா போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்., 17ம் தேதி கடைசி நாளாகும்.