தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பட்டுசாமி மற்றும் அவரது தம்பி லட்சுமணராஜா ஆகியோர் செங்கோட்டை காந்தி சிலை அருகே நின்றிருந்தபோது, அங்கு மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நபர், பீர் பாட்டிலால் தாக்கியதுடன் கற்களைத் தூக்கிப் போட்டுக் கொடூரமாகத் தாக்கியதில் பட்டுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இத்தாக்குதலில் பட்டுசாமியின் தம்பி லட்சுமணராஜா படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது அங்கிருந்த பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மூதாட்டி ஒருவர் மட்டும் துணிச்சலுடன் தாக்குதலைத் தடுக்க முயன்றுள்ளார். இதற்கிடையே, பட்டுசாமி மீது கல்லைத் தூக்கிப் போட்டுத் தாக்கும் கொடூரக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பட்டுசாமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய செங்கோட்டை வாணிபத் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை என்ற ரஞ்சித்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இக்கொலைச் சம்பவம் செங்கோட்டை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.