மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
"இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தற்போது தேசிய சமூகநல ஓய்வூதியத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, தற்போதைய வாழ்வாதாரச் செலவு, பணவீக்கம், விலை உயர்வு, மருத்துவம் மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பொருளாதார நிலைக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையை அவ்வப்போது மாற்றியமைக்கவும், தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் சரியான நேரத்தில் தடையின்றி ஓய்வூதியம் வழங்கப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

