தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, லண்டன் காவல் துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். லண்டன் சென்றுள்ள அவர், தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

முதலமைச்சர் தங்கியிருக்கும் தகவலையறிந்த லண்டன் வாழ் தமிழ் மக்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களும் அவரைக் காண்பதற்காக ஹோட்டல் எதிரே உள்ள வீதிகளில் திரண்டனர். "TVK... TVK..." என முழக்கமிட்டபடி பெரும் திரளாக மக்கள் கூடினர்.

முதலமைச்சர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையமும், முக்கிய மருத்துவமனை ஒன்றும் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கும், அவசர ஊர்திகளின் இயக்கத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, அங்கிருந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு லண்டன் காவல் துறையினர் மைக் மூலம் அறிவுறுத்தினர்.

சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜ் ஐ.பி.எஸ்., லண்டன் போலீசாருடன் இணைந்து, "அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியீடு ஒன்று வெளியிடப்பட்டது. அதில்: முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் காண லண்டன் வாழ் தமிழ் உறவுகள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பதை அறிகிறோம். எனினும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, தலைவரைச் சந்திக்கும் சூழல் தற்போது இயலாமல் போயுள்ளது.

எனவே, அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலிலோ அல்லது அவர் செல்லும் வழிகளிலோ பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.