தமிழகத்திற்கு அதிநவீன தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 6 நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டு, துபாய் வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு, பிரிட்டன் தமிழ் சங்கத் தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரைகண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இப்பயணத்தின் போது மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, உலகப்புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத்திடலில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை' கார் பந்தயத்தைப் பச்சைக்கொடியசைத்துத் தொடங்கி வைக்க முதல்வர் விஜய் சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்றார்.
அங்கு பந்தயத்தில் பங்கேற்கும் பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரை, முதல்வர் விஜய் நேரில் சந்தித்து ஆரத்தழுவித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த லண்டன் வாழ் தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் செல்பி எடுத்தும், கைதட்டியும் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

