குமரி மாவட்டம் வழியாகக் கேரளாவுக்குக் கனிம வளங்களைக் கடத்தும் லாரிகள் மீது முன்பு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் இடமாற்றத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மீண்டும் இரவோடு இரவாகக் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளின் நடமாட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் உள்ளூர் கிராமச் சாலைகள் வழியாக 12 சக்கரங்கள் கொண்ட கனரக டாரஸ் லாரிகள் தடையின்றிச் சென்று வருகின்றன. சில சோதனைச் சாவடிகளில் மட்டுமே லாரிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் எவ்வித சோதனையுமின்றி லாரிகள் தப்பிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர்ச் சாலைகளில் பயணிப்பதற்கு அனுமதி இல்லாத 12 சக்கரக் கனரக லாரிகள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன? இதற்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்விகள் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளன.
காவல் துறையின் இந்த மெத்தனப்போக்கால் கனிம வள மாபியா கும்பல் உற்சாகமடைந்துள்ளதாகவும், விபத்து அபாயம் மற்றும் சாலைச் சேதங்கள் காரணமாகப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இரவு நேரங்களில் சட்டவிரோதமாக இயங்கும் கனிம வள லாரிகளின் பயணத்தை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

