கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன டிக்கெட்டுக்கு ரசீது வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோவிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு உரிய ரசீது வழங்காமல் கட்டணம் வசூலித்து முறைகேடு நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் தீவிர விசாரணை நடத்தினார்.
அமைச்சரின் ஆய்வினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பக்தர்களிடம் தரிசனக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு உரிய ரசீது வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 கோவில் ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது எனவும், பக்தர்களுக்குச் சரியான முறையில் கணினி ரசீதுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

