கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் செயலராகப் பணியாற்றி வந்த தேவசகாயம் பால்ராஜ் (64), உதவி செயலர்களான வடசேரி பகுதியைச் சேர்ந்த நடராஜ் (63), புத்தேரியைச் சேர்ந்த பூதலிங்கம் பிள்ளை (63) மற்றும் எழுத்தர் விஜயகுமாரி (68) ஆகியோர் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பர்ணபாஸ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள் 4 பேரும் கடந்த 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயக் கடன், பயிர்க் கடன் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் ஆகியவற்றின் கணக்குகளில் முறைகேடு செய்து சுமார் ரூ.17 கோடியே 15 லட்சம் மோசடி செய்து கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தேவசகாயம் பால்ராஜ், நடராஜ், பூதலிங்கம் பிள்ளை மற்றும் விஜயகுமாரி ஆகிய 4 பேரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

