கோவாவில் நடைபெறவுள்ள 57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் (IFFI 2026) மதிப்புமிக்க 'இந்தியன் பனோரமா' (Indian Panorama) பிரிவில் திரையிடுவதற்காக, தமிழ் சினிமாவின் ‘தாய் கிழவி’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் Passion Studios இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்குக் கிடைத்துள்ள இந்தத் தேசிய அளவிலான அங்கீகாரம் தமிழ் திரையுலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பிரபல மூத்த நடிகை ராதிகா சரத்குமார் 'பவுனுத்தாயி' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. வயதான பெண்ணின் வாழ்வியல், குடும்ப உறவுகள் மற்றும் பெண்களின் சுயமரியாதை ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவை கலந்தும் விவரித்த இப்படம் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
உலகளவில் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து, 2026-ஆம் ஆண்டின் மிக முக்கியமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக ‘தாய் கிழவி’ இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேசிய அளவிலான கௌரவத்தைப் பெற்றதற்காக, முதன்மைப் பாத்திரத்தில் நடித்த ராதிகா சரத்குமார், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன், தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன், சுதன் சுந்தரம் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

