இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் எச்1-பி (H-1B) விசா பெற்றுப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' வழங்குவதற்கான சான்றிதழ் திட்டத்தை அமெரிக்க அரசு அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்1-பி விசா மூலம் இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' பெற்றுத் தருவதற்கு நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தைப் பயன்படுத்தி வந்தன.

இந்நிலையில், உள்நாட்டு அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதாகக் கூறி அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கீத் சாண்டர்லிங் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் வாஷிங்டனில் இதற்கான கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அப்போது அமைச்சர் கீத் சாண்டர்லிங் பேசுகையில்: "அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் இன்போசிஸ், டாடா, விப்ரோ, காக்னிசன்ட், ஹெச்சிஎல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் வழங்கும் திட்டம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந் நிறுவனங்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் புதிய அல்லது நிலுவையில் உள்ள எந்த விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படாது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந் நிறுவனங்கள் மட்டுமே சுமார் 30 லட்சம் வெளிநாட்டு ஊழியர்களைக் கோரி, 2 லட்சத்துக்கும் அதிகமான எச்1-பி விசாக்களைப் பெற்று உள்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பறித்துள்ளன" எனக் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பேசிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், எச்1-பி விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களை அடிமைகள் போல் பயன்படுத்தி 'விசா ஆலைகளைப் போல' இந்நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந் நடைமுறையைத் தொடர விடமாட்டோம் என்றும் எச்சரித்தார்.

'நாஸ்காம்' கடும் அதிருப்தி :

அமெரிக்க அரசின் இந்நடவடிக்கைக்கு இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்' கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாஸ்காம் வெளியிட்ட அறிக்கையில்: திறன் சார்ந்த பணியாளர்களின் இடப்பெயர்வை வெறும் குடியேற்றத்துடன் தொடர்புடையதாக மட்டும் பார்க்கக் கூடாது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் விசா சார்பைக் பெருமளவு குறைத்துக்கொண்டு, அமெரிக்காவிலேயே பல்லாயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன" எனத் தெளிவுபடுத்தியுள்ளது.