எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிகப் போக்குவரத்து நெரிசல் பகுதியான ரிங் ரோடு நெடுஞ்சாலையில், வாராக் என்ற இடத்தில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிய எரிபொருள் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி அஷாரா சுரங்கப்பாதையில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. இதில் எரிபொருள் வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது.

மேலும், லாரி அருகே சென்று கொண்டிருந்த கார்கள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதனால் வாகனங்களுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். நெடுஞ்சாலையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கடும் புகைமூட்டம் எழும்பியது.

தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாகனங்களுக்கு இடையே பரவிய தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். தீப்பிடித்து எரிந்த வாகனங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இந்தக் கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 20-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து கருகின.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எகிப்து அதிபர் அப்தெல் எல்சிசி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான டி.என்.ஏ. பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.