தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து, கவினின் பெற்றோர் தங்களது வீட்டில் 2-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் கவின் இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்ததாகக் கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பெற்றோர் (சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன் - கிருஷ்ணகுமாரி) மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன் - கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை சமீபத்தில் ரத்து செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவினின் பெற்றோர் ஆறுமுகமங்கலத்தில் உள்ள தங்களது வீட்டின் முன்பாகக் கவினின் படத்துடனும், "நீதி வேண்டும்" என்ற கோரிக்கையுடனும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். நேற்று இப்போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இவழக்கில் முதலமைச்சர் தலையிட்டு, உடனடியாக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டம் நீடித்த நிலையில், ஏரல் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட கவினின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொலைபேசி வாயிலாக கவினின் பெற்றோரிடம் பேசினார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், எனவே போராட்டத்தைக் கைவிடுமாறும் அமைச்சர் உறுதி அளித்தார்.
இருப்பினும், அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்பதற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழி வழங்கும் வரை தங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என கவினின் பெற்றோர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.

