"எனக்கு விஜய்யை ஒரு நடிகராகவே தெரியும்; அரசியலை உன்னிப்பாகப் பின்தொடர்ந்து பகுப்பாய்வு செய்வது என் வேலையல்ல; எனக்கு வேறு வேலைகள் உள்ளன" என விஜய் சேதுபதி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பேசிய கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் குறித்தும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அண்மையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் குறித்துத் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளானது. அவர் முதலமைச்சர் விஜய்யைத்தான் மறைமுகமாக விமர்சித்ததாகக் கூறி, தவெக தொண்டர்கள் அதனைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதியை விமர்சிக்கத் தொடங்கினர். இதன் தாக்கம் அவரது 'பத்தா' திரைப்பட வசூலிலும் எதிரொலித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய்யின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, "எனக்கு நிறைய வேலை உள்ளது. எனக்கு விஜய்யை ஒரு நடிகராகவே தெரியும். நான் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, அவர் அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், அவற்றை எவ்வாறு செயல்படுத்த உத்தேசித்துள்ளனர் என்பதைப் பற்றியதுதான் அது. அதற்கு அப்பால், அரசியலை உன்னிப்பாகப் பின்தொடர்வதும், பகுப்பாய்வு செய்வதும் உண்மையில் என் வேலை அல்ல; எனக்கு வேறு வேலைகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசியல் ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் கூறியதாவது: "அரசியல் என்பது ஆசை அல்ல; அது சேவையைப் பற்றியது. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை மக்களுக்குச் செய்கிறேன்; அது போதும் என்று நினைக்கிறேன்."

"நான் இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளேன். இலவசத் துணிக்கடை ஒன்று வைத்துள்ளேன். எங்கள் ஊரில் இப்போதுதான் குளம் ஒன்றைத் தூர்வாரிக் கொடுத்தேன். நிறைய பேரைப் படிக்க வைக்கிறேன். இதுவே அரசியல்தான். நான் சம்பாதிக்கிறேன்; எனது பணத்தில் மக்களுக்கு எதையோ செய்கிறேன்; இதில் திருப்தியாக இருக்கிறேன்."

மேலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் சமூக வலைதளங்களின் போக்கு குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, "அரசியல் கருத்து தெரிவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதனை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கு யாருக்கும் கிடையாது. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி.

மற்றொன்று, கருத்து வைக்கும் அளவிற்கு நான் அதனைக் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். அதன்பிறகு நான் கூறும் கருத்து நான் நடிக்கும் படத்தைப் பாதிக்கக் கூடாது. ஆனால் இன்று சமூக வலைதளங்கள் அப்படிச் செயல்படுவதில்லை" எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.