தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் இன்னோக். கப்பலில் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் கப்பல் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்ற இன்னோக், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார்.
ஊர் திரும்பிய அவருக்குத் தனது காதல் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியின் செல்போனை அவர் ஆய்வு செய்தபோது, செல்வமாதா ஆலயப் பாதிரியாருடன் அவர் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மனைவியிடம் கேட்டபோது அவரும் அதனை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், பாதிரியார் தனது மனைவியிடம் ஆசைவார்த்தை கூறிப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் பாதிரியாரின் ஆதரவாளர்கள் தனது வீட்டிற்கு வந்து பொருட்களைச் சேதப்படுத்திச் சூறையாடியதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்னோக் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தாஸ், பிரித்தி, யோவான், சேகரன், ஜெகதீஸ், ஜியாஜியாம், சூர்யா, ஜேசு, மாதவன், கரோல், நிஷாந்த், தீபக் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், மனைவியிடம் அத்துமீறியதால் ஆத்திரமடைந்த இன்னோக், அவரது தந்தை செல்டன் மற்றும் நண்பர்கள் பிரேம், ஜெயக்குமார், பீர் ஆகிய 5 பேரும் பாதிரியார் பங்களாவிற்குச் சென்று கதவை உடைத்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிங்கித்துறை ஊர் நலத் தலைவர் தேவதாஸ், பாதிரியார் பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்து கட்டையால் கதவை உடைத்துப் பாதிரியாரை அவதூறாகப் பேசினர் எனப் பாதிரியார் தரப்பில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் இன்னோக், செல்டன், பிரேம், ஜெயக்குமார், பீர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட இளம்பெண் மற்றும் பாதிரியார் பேசும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

