தனியார் தொலைக்காட்சியின் பாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த கனடா நாட்டுப் பெண்ணை நிர்வாணப் பரிகாரப் பூஜை செய்ய வைத்து, அப்படங்களைக் காட்டி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற தென்காசியைச் சேர்ந்த கிளி ஜோதிடரை சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 37 வயது பெண் ஒருவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் பாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்ற அவர், அங்குள்ள கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார்.
அந்த ஜோதிடர் கூறிய கடந்த காலக் கணிப்புகள் சரியாக இருந்ததால், வியப்படைந்த அப்பெண் ரூ.20,000 கட்டணமாக வழங்கியுள்ளார். அப்பெண்ணுக்கு ஜோதிடத்தின் மீது இருந்த அதிக நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட கிளி ஜோதிடர், அவருக்குப் பெரிய 'தோஷம்' இருப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார்.
தோஷம் நீங்க நிர்வாணப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என நம்பவைத்த ஜோதிடர், அப்பெண்ணை வாட்ஸ்அப் (WhatsApp) வீடியோ காலில் நிர்வாணக் கோலத்தில் வரச் சொல்லிப் பரிகாரப் பூஜை செய்வது போலத் தனது கைபேசியில் பதிவு செய்துகொண்டார். மேலும், இதற்குப் பரிகாரக் கட்டணமாக ரூ.70,000 பணத்தையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கனடா சென்று மீண்டும் போட்டி நிமித்தமாகச் சென்னை திரும்பிய அப்பெண்ணிடம், மீண்டும் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என்றும் அதற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் ஜோதிடர் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஜோதிடர், "உன்னுடைய நிர்வாணப் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. கேட்ட பணத்தைத் தர வேண்டும் அல்லது எனது ஆசைக்கு இணங்க வேண்டும்; தவறினால் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்" எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜோதிடரின் சுயரூபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மிரட்டல் விடுத்தவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கிளி ஜோதிடர் இசக்கிமுத்து (48) என்பவரைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து தென்காசிக்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் இசக்கிமுத்துவை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

