கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரிக்சன் மனோஜோஸ் (53). இவர் அன்னை வேளாங்கண்ணி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது நிறுவனத்தில் பெண்கள் வேலைக்கு தேவைப்படுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரத்தை பார்த்த கல்லூரி மாணவி ஒருவர் வேலை கேட்டு நிறுவனத்திற்கு சென்ற நிலையில், அவரை மனோஜோஸ் பணியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் பணிபுரிந்த நிலையில், கண்ணில் சொட்டு மருந்து ஊற்ற வேண்டும் எனக் கூறி மாணவியை தனியறைக்கு வருமாறு மனோஜோஸ் அழைத்ததாக தெரிகிறது.
அங்கு சென்ற மாணவியிடம், தனது செல்போனில் இருந்த மசாஜ் தொடர்பான வீடியோக்களை காண்பித்து, அதுபோல் தனக்கு மசாஜ் செய்தால் அதிக சம்பளம் தருவதாக கூறியதுடன், மாணவியிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து உடனடியாக வெளியேறி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரிக்சன் மனோஜோஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வேலை தேடி வரும் பெண்களிடம் இதுபோன்று பேசி அவர்களை தனது ஆசைக்கு இணங்கச் செய்ததாகவும், அவர்களை ஷிப்ட் அடிப்படையில் வரவழைத்து பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

