காவல் துறையால் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேரக் காலக்கெடு எப்போது தொடங்கும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்பதிலீட்டில், அந்த 4 பேரும் கைது செய்யப்படுவதற்கு முன்பு 18 மணி நேரம் சட்டவிரோதமாகப் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் விவரம்:
ஒரு நபர் எப்போது காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறாரோ, அந்த கணத்தில் இருந்தே 24 மணி நேரத்திற்குள் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு தொடங்குகிறது. ஒருவரை காலை 10 மணிக்குத் தடுத்து வைத்துவிட்டு, மாலை 6 மணிக்குத்தான் கைது செய்ததாகக் காவல் துறை பதிவு செய்தாலும், காலக்கெடுவை காலை 10 மணியில் இருந்தே கணக்கிட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர் உண்மையில் எந்த நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்பதை நீதிபதி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். முறைப்படியான கைது பதிவேட்டைக் காட்டிவிட்டு, தாமதமாக ஆஜர்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 24 மணி நேரம் அவகாசம் உள்ளது என்பதற்காக ஒருவரைத் தேவையின்றி நீண்ட நேரம் தடுத்து வைத்திருக்கக் கூடாது.

