தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள், கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைக் கையில் ஏந்திக் கொண்டு பொதுமக்களை மிரட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவைப் பதிவிட்டுள்ளதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தாமஸ் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அதில் தொடர்புடைய 16 வயதுச் சிறுவனைக் காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான மற்றும் சட்டம்-ஒழுங்கிற்குப் பாதகமான வீடியோக்களைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

