பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் வாங்கப்பட்டு, அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. திமுக ஆட்சியில்தான் ஊழல் நடந்துள்ளது. நூலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டு, எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அகல் விளக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்க திமுக அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. தெம்பு, திராணி இருந்தால் திமுக ஊதுகுழல்கள் மறுக்க முடியுமா? குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியது.

பெரியார் நூலகத்துக்கு நூல்கள் வாங்கியது தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 14-ஆம் தேதி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் வாங்கப்பட்டன.

சென்னை கன்னிமாரா நூலகத்திலும் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான புத்தகங்களை திமுக ஆட்சியில் வாங்கியுள்ளனர். அதில், ஒரு புத்தகத்தின் எழுத்தாளர் பெயர் கமலாம்பாள் கருணாநிதி. அவரை தெரியுமா?

மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காலம் ஒருபோதும் திமுகவை மறக்காது; மன்னிக்காது. இது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.

100-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுவை எப்படி இன்ஃப்ளுயன்ஸ் செய்தனர்? குழுவில் இருந்த அத்தனை பேரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு, முறைகேடு நடந்துள்ளது. திமுக ஆட்சியில் நூலகங்களுக்கு போலி நூல்கள் வாங்கி பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய நூலகங்களில் திமுக ஆட்சி காலத்தில் டிஜிட்டல் கரையான் அரித்திருக்கிறது. மாணவர்கள், தமிழக மக்களிடம் மண்டியிட்டு திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

சென்னை கன்னிமாரா நூலகத்திலும் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. போலி எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து கூறினால் சன்மானம் வழங்கப்படும். ஒருவர் மட்டுமே இரண்டு, மூன்று பதிப்பகங்களை நடத்தி உள்ளார். போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதன் பிண்ணனியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நூலக கட்டிடப் பணியில் ஊழல் நடந்துள்ளதா என அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா விசாரிக்க வேண்டும். வெளிப்படையாக ஊழல் செய்துவிட்டு, திசை திருப்பும் வேலையில் திமுக ஈடுபட்டு வருகிறது. திமுக விஞ்ஞான ஊழல் செய்துள்ளது என கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போதுதான் பார்க்கிறோம். யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

கோவை பெரியார் அறிவுலகம் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. கொள்முதல் ஆணைகள் பிப்ரவரியில் வழங்கப்பட்டதாக தவெகவும், நூல்களில் ஜூன் மாத முத்திரை இருப்பதாக திமுகவும் குற்றம்சாட்டி வருவதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது கவனிக்கத்தக்கது.