சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. சட்டத்துறை இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போலி ‘ரீல்ஸ்’ மூலமாக ஆட்சிக்கு வந்த த.வெ.க. தி.மு.க. மேல் ஒரு போலி ‘நெரட்டிவ் செட்’ பண்ணி, வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்கள்.
பெரியார் அறிவு உலகத்தில் தரமான புத்தகம் இல்லை, தவறான புத்தகங்களாக இருக்கிறது என்று ஒரு சர்ச்சை வந்தவுடனே, ஆட்சியில் இருக்கக்கூடிய நீங்கள் (த.வெ.க. அரசு) ஏன் அந்த புத்தகத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு இன்னும் உத்தரவு போடவில்லை?.
இந்த புத்தகங்கள் எல்லாம் யார், எப்போது கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் இன்னும் வெளியிடவில்லை?. இதுல வந்திருக்கக்கூடிய ஒரு புத்தகத்தினுடைய ஆசிரியர் பெயர் ‘திரிஷா விஜய்'. யாரும் இந்த புத்தகத்தை வாங்க மாட்டார்கள். அதுவும் தி.மு.க.வான நாங்க வாங்க மாட்டோம். தி.மு.க. செய்யவில்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?.
தி.மு.க. அறிவார்ந்த இயக்கம். அறிவை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் பண்றோம். இவர்களை மாதிரி அரைவேக்காட்டுத்தனமாக போலி ரீல்ஸ் போட்டு அரசியல் செய்கிறவர்கள் கிடையாது.
இந்த புத்தகங்கள் எல்லாம் ‘அகல் விளக்கு' என்ற பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு எப்போது கொள்முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டது? எப்போது வங்கியில் இருந்து அக்கவுண்ட்டுக்கு பணம் போயிருக்கிறது? எந்த தேதியில் இந்த புத்தகங்கள் பெரியார் அறிவு உலகத்திற்கு வரப்பெற்றது? இதையெல்லாம் வெளிப்படையாக நீங்கள் அறிவியுங்கள். தி.மு.க. தவறு செய்திருந்தால் எடுத்து போட்டு காட்டுங்கள்.
‘திரிஷா விஜய்' என்று ஒரு புத்தகத்தை யாராவது வெளியிடுவார்களா? இதை த.வெ.க.வின் ரசிகர் யாரோ செய்திருக்கிறார். இதை மறைக்கிறதுக்காக தி.மு.க. மேல் பழி போடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

