வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் நவம்பர் 1-ல் நடைபெறவுள்ள பேரணியை ஒத்திவைக்கக் கோரிய வணிகர்களுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துங்கள், அவர் அதை ஏற்றுக்கொண்டால் வெறும் 30 வினாடிகளில் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிடுகிறோம் என வணிகர் அமைப்பினரிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டி, டெல்லியில் நவம்பர் 1-ஆம் தேதி 'இந்தியா' கூட்டணி சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான பேரணி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இதுதொடர்பாக டெல்லி தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் பிரிஜேஷ் கோயல், ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், "தீபாவளி பண்டிகைக் காலத்தில் ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும். தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் ரூ.25,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறவுள்ளதால், நவம்பர் 10-க்குப் பிறகு பேரணியை நடத்தப் பரிசீலிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "டெல்லியில் உள்ள ஒவ்வொரு வணிகர் மீதும் நாங்கள் அன்பும் மரியாதையும் வைத்துள்ளோம். உங்கள் குரலுக்கு நாங்கள் செவிமடுக்கிறோம்.

ஆனால் உங்கள் வாக்குகள் திருடப்பட்டால், நாளை உங்கள் கடை, சேமிப்பு, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என எதுவுமே பாதுகாப்பாக இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் என்னிடம் கோரிக்கை விடுப்பதற்குப் பதிலாக, வாக்குத் திருட்டு விவகாரத்தில் 4-வது குற்றவாளியான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டும். அதை அவர் ஏற்றுக்கொண்டால் இந்த போராட்டங்கள் வெறும் 30 வினாடிகளில் முடிவுக்கு வந்துவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.